தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை!
பல்வேறு நகரங்களில் தமிழகத்தில் வெயில் அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் மதுரை மற்றும் சேலத்தில் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. பருவமழையும் சரிவர பெய்யவில்லை. குடிநீர் ஆதாரங்களுக்கான அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடையில் வெயிலில் சதம் அடித்த முதல் நகரமாக சேலம் உள்ளது.
பல்வேறு நகரங்களிலும் தமிழகம் முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்குவதால் பல நகரங்களில் வெயில் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி அதிகபட்சமாக மதுரை, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் தருமபுரியில் 97.88, திருத்தணி, கரூர் பரமத்தி வேலூரில் தலா 97.7, வேலூரில் 97.34 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலையாக 95, குறைந்தபட்சமாக 71.6 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.