“பலவீனமான புளியந்தோப்பு கட்டடம்;குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள்” – சீமான்..!

Default Image

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கேபி பார்க் கட்டடம்,ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனையடுத்து,கட்டிடத்தின் தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக்குழுவின் ஆய்வறிக்கையை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,இன்று நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரிலும் இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இந்நிலையில்,சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கேபி பார்க் கட்டடம்,ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேடு:

“சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக்குடியிருப்பாக புளியந்தோப்புப்பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் அடுக்ககத்தின் கட்டுமானம் மிகமோசமான நிலையிலிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அக்கட்டிடம் மிகப்பலவீனமாக இருப்பதும், கான்கிரீட் காரைகள் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள்:

ஒரு வீட்டிற்கு 15 இலட்சம் வீதமென செலவினத்தை மதிப்பிட்டுவிட்டு, தரமற்ற வீட்டைக்கட்டி முறைகேடு செய்திட்ட முந்தைய அதிமுக அரசின் மோசடித்தனத்தையும், கட்டிடத்தின் தரத்தைக்கூட பரிசோதிக்காமல் மக்களை அவசரகதியில் குடியேற்றிய திமுக அரசின் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்று அழைத்துச்சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே! 2016 ஆம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும், அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் நமக்கு பெரும் படிப்பினையாக இருக்கிறது. மீண்டும் அதுபோல ஒரு கோரவிபத்து நிகழ்ந்துவிடக்கூடாது.

சட்டப்படி கடுமையான நடவடிக்கை:

ஆகவே, உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும், அடுக்ககத்தைத் தரமற்றதாகக் கட்டி மக்கள் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்