“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!
கொளத்தூரில் செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை சூறையாடவில்லை. திமுக அமைச்சர்கள் தான் மக்கள் வரிப்பணத்தை சூறையாடுகின்றனர். தி.மு.க அமைச்சர்கள் 9 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது மக்களின் பணத்தை சுரண்டுவதற்காக தான் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வருகிறார்கள் தங்களுடைய தோல்விகளை மறைப்பதற்காகவே முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுகிறார்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவருடைய விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொளத்தூரில் செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். முதல் கேள்வியாக தமிழிசை சௌந்தரராஜன் கூறிய விமர்சனம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் ” அவருக்கு வேற வேலையில்லாமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர்களுக்கு மேலாக 200க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறுவோம்” எனவும் பேசினார்.
அடுத்ததாக செய்தியாளர் “அரசியல் பணியை தீவிரப்படுத்தியுள்ளீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ” நாங்கள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி ரொம்ப நாள் ஆகிவிட்டது” என பதில் அளித்துவிட்டு சென்றார்.