‘வெச்ச செங்கலை கூட காணோம்’ – எய்ம்ஸ் கட்டுமானப்பணி குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி..!
எய்ம்ஸ் மருத்துவமனையின் உண்மையான நிலவரம் என்னவென்றால், ‘வெச்ச செங்கலை கூட காணவில்லை’ என்கின்ற நிலைமையில் தான் உள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி, எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
சாவர்கர் புல்புல் பறவையில் வந்தது போல் ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம். கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளது ஏற்புடையதல்ல. எய்ம்ஸ் மருத்துவமனையின் உண்மையான நிலவரம் என்னவென்றால், ‘வெச்ச செங்கலை கூட காணவில்லை’ என்கின்ற நிலைமையில் தான் உள்ளது. பாஜக பொய்யை சொல்வதை மட்டுமே முழுநேரமும் முனைப்பாக கொண்டு செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.