கேரளாவுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வோம்.! முதல்வர் மீண்டும் உறுதி.!

Tamilnadu CM MK Stalin - Kerala Wayanad Landslide

சென்னை : கனமழை காரணமாக கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில மீட்பு படையினர், ராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, அவர்களுக்கு உதவிகள் புரிய தமிழக அரசு சார்பில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணி அளவில் வயநாடு சென்றடைந்தனர். மேலும், தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வயநாடு பாதிப்பு குறித்தும் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், நான் கேரள முதல்வரிடம் தொலைபேசியில் பேசினேன். அவர், இன்னும் நிலச்சரிவு பாதிப்பு கணக்கீடு செய்யப்படவில்லை என்று கூறினார். வயநாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்வர் கூறினார். அவரிடம் நான், கேரளாவுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தமிழ்நாடு அரசு சார்பாக செய்து தருவோம். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவ குழு, மீட்பு குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளோம். 5 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளோம். இனியும் தேவைப்பட்டால் உதவிகள் செய்து தருவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்