மேலிடம் சொல்லும்வரை கூட்டணி குறித்து கருத்து கூற மாட்டோம் – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்!
தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக இடையே தொடர் மோதல் நிலவி வந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமை அறிவித்தது. கூட்டணியை நீடிப்பதா? அல்லது முறிப்பதா? என குழப்பம் இருந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டது. அதுவும், அதிமுகவில் ஒரு தரப்பினர் கூட்டணி தொடர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் கூட்டணி வேண்டாம் எனவும் தெரிவித்து வந்தபோது, இறுதி கட்ட முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இபிஎஸ் தள்ளப்பட்டார்.
இருப்பினும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள அதிமுக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. பாஜக கூட்டணியில் இருந்து விலகியதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் முடிவிற்கு சில கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், ஆனால், கூட்டணி முறிவு நிரந்தரமா? என மற்ற கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூட்டணி முறிவு குறித்த அறிவிப்பிற்கு பிறகு அதிமுக – பாஜக நிர்வாகிகள் மவுனம் காத்து வருகின்றனர். கூட்டணி முறிவு குறித்து பாஜகவினவினர் கூறுகையில், அதனால் பாஜகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை, இதுதொடர்பாக தேசிய தலைமை அறிவுறுத்தலுக்கு பிறகு கருத்து கூறுவோம் என கூறி வருகின்றனர். மறுபக்கம், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் என அதிமுக கூறியுள்ளது.
இந்த நிலையில், கூட்டணி குறித்து தலைவர்கள் பேசும் வரை நாங்கள் கருத்து கூறமாட்டோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்கள் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு, தனி சித்தாந்தம் ஆகியவை இருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைப்பது தான் கூட்டணி. எனவே, தேசிய தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை கூட்டணி முறிவு குறித்து நாங்கள் பேசமாட்டோம் என தெரிவித்துள்ளார்.