சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம் – மு.க.ஸ்டாலின்.
சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை தொடர்பாக, திமுக சார்பில் காணொலிக் கருத்தரங்கு நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,இந்தியாவின் சுற்றுச்சூழல் மட்டுமல்ல; உலகத்தின் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெட்டுப் போய்க்கிடக்கும் காலக்கட்டத்தில், இத்தகைய ஒரு கருத்தரங்கை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.சில வாரங்களுக்கு முன்னால் கல்வி உரிமையைக் காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் நாட்டில் ஏற்கனவே இருக்கும் கல்வியைச் சிதைக்கும் காரியத்தைச் செய்ய மத்திய அரசு அந்தக் கொள்கையைக் கொண்டுவருவதைக் கண்டிக்கும் வகையில், அந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கம், சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப்படும் சட்டம், சூழலைக் கெடுப்பதாக அமைந்திருப்பதை மத்திய அரசுக்கு எடுத்துக் காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா என்ற நோய் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளின் மனதிலும் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்ற உறுதியை நான் அளிக்கிறேன் என்று பேசினார்.