எந்த காலத்திலும் மும்மொழிக் கொள்கையை எற்றுக் கொள்ள மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இருமொழி கொள்கை அதில் எந்த மாற்றமும் இல்லை என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இன்னும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். உதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” இரு மொழிகொள்கை விவகாரம் தொடர்பாக பாஜகவை தவிர அணைத்து கட்சிகளும் தங்களுடைய உணர்வுகளை இங்கு வெளிப்படுத்திக்காட்டியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் டெல்லி செல்வதாக எனக்கு செய்தி வந்தது.
டெல்லி சென்று யாரை சந்திக்கபோகிறார் என்ற செய்தியும் எனக்கு வந்தது. இந்த நேரத்தில் அவருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், சந்திக்கும் நேரத்தில் மும்மொழி கொள்கை வேண்டாம் என்பது குறித்து வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இருமொழி கொள்கை அதில் எந்த மாற்றமும் இல்லை. இரு மொழிகொள்கை மட்டுமில்லை நம்மளுடைய வழி மொழிக்கொள்கையும் அது தான்.
ஹிந்தியை ஏற்றுக்கொண்டால் தான் பணம் தருவோம் என்று மிரட்டினாலும் தாய்மொழியை காப்போம். 2000 கோடி என்ன? 10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம். மீண்டும் இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்கிறேன். இது பணத்திற்கான பிரச்சினை அல்ல..இனத்திற்கான பிரச்சினை. எனவே, அவர்கள் நிதி தரவில்லை என்பதற்காக இனத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை இல்லை. நம்மளை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது இருமொழி தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்போது, தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் என சொன்னார். இது தமிழ்நாட்டுக்கு அண்ணா அளித்த மாபெரும் கொடை. இது கொள்கை மட்டும் இல்லை சட்டமும் கூட தமிழக தொடர்புக்கு தமிழும்…உலக தொடர்புக்கு ஆங்கிலமும் என்பது தான் அண்ணா படைத்த சட்டம். எனவே, இந்த இரு மொழிக்கொள்கை தான் அரைநூற்றாண்டு காலமாக தமிழநாட்டை வளர்த்து வந்துள்ளது. உலகளாவிய பரப்பில் நம்மளுடைய ஆளுமையை செலுத்தவும் வளரவும் வழிமொகுத்த கொள்கை என்றால் இருமொழி கொள்கை தான்.
எந்த மொழிக்கும் எதிரானவர்கள் நாம் இல்லை. இந்த இரு மொழியை போதும் என்று சொல்பவர்கள் நாம். யார் எந்த மொழியை கற்பதற்கும் நாங்கள் தடையானவர்கள் இல்லை. அதே நேரத்தில் தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பது தான் இருமொழி கொள்கையின் நோக்கம். எனவே, இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கிறோம் எப்போதும் இருப்போம்” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.