ஆதார், ரேஷன் அட்டைகளை திரும்ப கொடுத்துவிடுவோம்.! போராட்டக்காரர்கள் திடீர் அறிவிப்பு.!
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் இருந்து பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் சேர்க்காவிடில், நாங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை திரும்ப கொடுத்துவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடியானது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுங்க சாவடிகளில் வேலைபார்த்த சுமார் 25க்கும் மேற்பட்டோரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, மீதம் உள்ள ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருமாந்துறை சுங்கச்சாவடி முழுவதும் செயல்படாமல் இருப்பதால் அப்பகுதியில் வாகனங்கள் எந்தவித கட்டமுமன்றி சென்று வருகின்றன. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தனியார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று நள்ளிரவு திருக்கோவிலூர் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சுங்கத்துறை அலுவலக பூட்டை உடைத்து சுங்கச்சாவடியை கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
நேற்று நள்ளிரவிலும் போராட்டம் நடந்த நிலையியல் வருவாய்துறையினருடன் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிகிறது. மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஆதார், ரேஷன் கார்டு போன்றவைகளை திரும்ப கொடுத்துவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.