தலைவர் விஜயகாந்த் முடிவை ஏற்போம் – தேமுதிக மாவட்ட செயலாளர்கள்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவை ஏற்பதாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக தரப்பில் 13 -இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால் அவசர ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒதுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது தொடர்பாக தலைவர் விஜயகாந்த் முடிவை ஏற்பதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் அங்கீகாரம் பெறவேண்டும் என்றும் முரசு சின்னத்தை தக்கவைக்க வேண்டும் எனவும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கூட்டணியை விட்டு தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்புயில்லை என கூறப்படுகிறது. இன்று நடந்த கூட்டத்தில் அதிமுக தரப்பில் குறைந்த தொகுதிகள் ஒதுக்குவதால், நிர்வாகிகள் யாரும் அதிருப்தி அடைய வேண்டாம் என்றும் வரும் தேர்தலில் கருத்து வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்றும் தொகுதி பங்கீடு குறித்த முடிவு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.