மழை நீர் தேங்காது என்ற நினைப்போடு மெத்தனமாக இருந்துவிடக்கூடாது – முதலமைச்சர்
மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. நீர்வளம், வருவாய், பொதுப் பணி, நகராட்சி நிர்வாகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுடன் முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், செயலாளர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்தில் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என ஓரளவிற்கு நம்பிக்கொண்டுள்ளேன், எதிர்பார்க்கிறேன். மழை நீர் தேங்காது என்ற நினைப்போடு மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். பள்ளி கட்டங்கள், நிவாரண மையங்களை ஆய்வு செய்ய வேண்டும். 24 மணி நேரமும் அவசர உதவி மையங்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குடியிருப்பு சங்கங்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என அறிவுறுத்தல் வழங்கினார்.