வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கமலஹாசன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என கமலஹாசன் ட்வீட்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான் மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது.
ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவி வீட்டில் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோரும் உறவினரும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது என்று எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கதறி அழுதுள்ளனர்.
இதனையடுத்து, சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ என 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.’ பதிவிட்டுள்ளார்.
பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 12, 2021