பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – சீமான்
விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
அண்மைக்காலத்தில் பெண்களுக்கெதிராகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தானப் பெருங்கவலையைத் தருகின்றன. அத்தங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன்.
மனிதத் தன்மையே துளியுமற்று, இதுபோன்ற ஈவிரக்கமற்ற கோரச்செயல்களில் ஈடுபடுவர்கள் எவராயினும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையை உறுதிப்படுத்த தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை சமரசமற்றுச் செய்ய வேண்டும்
மேலும், பாதிக்கப்பட்ட அத்தங்கைக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சையளித்து, அவர் இப்பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, கைதூக்கிவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விருதுநகர் 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் அடிப்படையில், திமுகவை சேர்ந்த 2 பேர், கூலித் தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இன்று தமிழக சட்டப்பேரவையில், விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இந்த வழக்கு விரைந்து தண்டனை கொடுக்கும் முன்னணி வழக்காக இருக்கும் என்றும் உறுதியளித்திருந்தார்.
விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட தங்கைக்கு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சையளித்து, மீண்டெழுந்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.https://t.co/XJNQSpiJbP@CMOTamilnadu pic.twitter.com/ixJFVjnisU
— சீமான் (@SeemanOfficial) March 23, 2022