நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் திமுக குறித்து பேசிய விஷயங்களும் கண்டனங்களை எழுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. அதில் பேசிய அவர் ” முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது.
முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் திமுகவினர் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள்” என பேசினார். இதற்கு எம்பி கனிமொழி இப்படி தர்மேந்திர பிரதான் பேசியது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்த நிலையில், உடனடியாக தர்மேந்திர பிரதான் ” என்னுடைய பேச்சு வருத்தமளித்துள்ள காரணத்தால் நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என எதிர்ப்புகள் கிளம்பியவுடன் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், இந்த பிரச்சினையை சும்மாவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு மக்களவையை விட்டு வெளியே வந்தவுடன் எம்பி கனிமொழி ” தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என பேசியது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பப்படும்” என பேசியிருந்தார்.
இதனையடுத்து, தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு திமுகவை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவிக்க தொடங்கிவிட்ட நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” எனவும் பிரதான் எழுதிய கடிதத்தை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் தனது கண்டனத்தை கூறியுள்ளார்.
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.… pic.twitter.com/3uR2oMxLZw
— M.K.Stalin (@mkstalin) March 10, 2025