“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம்”- ராகுல் காந்தி!
பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம் என தெரிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதன்காரணமாக அந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி நடத்தினார்.
இதனைதொடர்ந்து இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கல்வி முறைக்கு ஒரு கொள்கையை நாம் உருவாக்க வேண்டும் என்றால், அது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான உரையாடலிலிருந்து வர வேண்டுமென கூறினார்.
மேலும், பொருளாதார ரீதியில் வலுவானவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை என கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம் என தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து ராகுல் காந்தி, திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார். அதுதொடர்பான விடியோவினை தமிழக காங்கிரஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலியில் வீற்றிருக்கும் திரு நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்று அவரை வழிப்பட்டார். அங்கு நம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்பட்டது.#TNwithRahulGandhi#VaangaOruKaiPaappom pic.twitter.com/1kKOZyQQcl
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 28, 2021