நோய் தீருவதற்கு ஒருசில கசப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு

Default Image

சொத்து வரி உயர்வு என்பது ஒரு கசப்பான மருந்துதான் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரி உயா்த்தப்படுவதாகவும், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த வரி உயா்வு அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்த சொத்து வரி உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, இதனை திரும்ப பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக இன்று தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகம் முழுவதும் இந்த ஆட்சிக்கு 5 லட்சம் கோடி கடன் சுமை  அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு 23 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய சூழல் உள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே சிரமப்பட வேண்டியுள்ளது. சொத்து வரியால் மக்களுக்கு சிறிய சுமை என்றாலும், ஒரு கசப்பான மருந்தாகத்தான் எண்ணி தருகின்றோம். நோய் தீரும் என்பதற்கு ஒரு சில கசப்புகளை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கடந்த 23 ஆண்டுகளில் இந்த சொத்து வரி ஏற்றம் என்பது அவ்வப்போது பல்வேறு சூழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பல்வேறு காரணங்கள் கருத்தில்கொண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வு என்பது ஒரு கசப்பான மருந்துதான். மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் இந்த வரி உயர்வு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பரிசீலித்து முடிவெடுப்பார். இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலை அறிந்தால் எந்த சுமையும் அரசு தாங்கி மக்களுக்கு சுகமான வாழ்க்கையை அளிப்பதற்கான ஒரு அரசுதான் இது. எனவே, இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்