செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம் – உதயநிதி விளக்கம்
மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாய பிரச்னை என்பதால் முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும், இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ‘மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.