நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம்.! மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.!
எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை நங்கள் அறிவித்துவிட்டோம். அவர்களை ஆதரித்து நாங்கள் தேர்தலுக்கு செல்கிறோம். மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. ‘ என கூறிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் களமிறங்க உள்ளார்.
இடைத்தேர்தல் பிரச்சாரம் : வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே காங்கிரஸ், திமுக கட்சியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர். இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்தும், அங்குள்ள தேர்தல் களம் குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
மு.க .ஸ்டாலின் உத்தரவு : அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சரும், எங்கள் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பெயரில் நாங்கள் இடைதேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நமது அரசின் கடந்த ஒன்றரை வருட திட்டங்களை மக்களிடம் கூறியும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னென்ன அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டுமோ அதனை செய்ய உறுதி கூறி, வாக்கு சேகரிப்போம். என குறிப்பிட்டு பேசினார்.
தோழமை மாண்பு : மேலும் அவர் கூறுகையில், எங்கள் தோழமை கட்சியின் மாண்பை நாங்கள் காப்பாற்றுவோம். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை நாங்கள் அறிவித்துவிட்டோம். அவர்களை ஆதரித்து நாங்கள் தேர்தலுக்கு செல்கிறோம். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ‘ என கூறிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு.