திருக்குறளை போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம் – தமிழ்நாடு ஸ்டார்ட்அப் விழாவில் முதலமைச்சர் உரை
கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரது உரையில், திருக்குறளை போல் நெறிப்படுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை.
சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி முக்கியமானது. 450 அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முக்கியம். இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கியுள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
2300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய நகரங்களில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. சமூக நீதியுடன் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். எந்த துறையாக இருந்தாலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.