“தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
மேலும்,இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க , அரசுப் பள்ளி மாணவியர், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில்,மாணவிகளுக்கு ரூ.1000 தருவதன் மூலம்,தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி இன்று 25-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயது உடையவர்களுக்கு 3.61 லட்சம் பேருக்கும், 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு 28.25 லட்சம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கம் சரியாக வழங்கப்படவில்லை.திட்டத்துக்காக வாங்கிய தங்கத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.இந்நிலையில், மாணவிகளுக்கு ரூ.1000 தருவதன் மூலம்,தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம்.’,என்று கூறியுள்ளார்.