“ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது”.. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!
அதிமுக யாராலும் உடையாது. உடைக்க முடியாது..முடக்க முடியாது.. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்ததில் இருந்து இப்போது வரை இருவருக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என்ற காரணத்தால் தான் கலந்துகொள்ளவில்லை என்கிற விளக்கம் அளித்ததை தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செங்கோட்டையன் தொடர்ச்சியாக கலந்துகொள்ளாமல் இருந்தது பேசுபொருளாக வெடித்தது.
அது மட்டுமின்றி, இந்த செய்திகள் ஒரு பக்கம் ஓடி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சட்டப்பேரவில்லை செங்கோட்டையன் அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்துவிட்டு நேராக சபாநாயகர் அறைக்கு சென்று அவரை சந்தித்து விட்டு வந்தது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியது. அதன்பிறகு இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்விகேட்டபோது ஏன் தவிர்க்கிறார் எனபதை அவரிடம் (செங்கோட்டையன்) கேளுங்கள். அவரிடம் கேட்டால் தான் பதில் தெரியும்”என காட்டத்துடன் பேசியிருந்தார்.
இந்த சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி ” இந்த கேள்வி ரொம்பவே முக்கியமான கேள்வியாக இருக்கவேண்டுமோ என்பதை நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
எப்போது பார்த்தாலும் இதே போலவே கேள்விகள் கேட்டுக்கொண்டு வருகிறீர்கள்.அதற்காக எங்களை பிரித்து பார்க்கும் பார்வையில் பார்க்கிறீர்கள்? எப்போது வேண்டுமானாலும் இந்த உஷாரான கேள்வியை கேட்கிறீர்கள்.எதாவது ஒரு குழப்பம் வராதா என்று நினைப்பதை விட்டுவிட்டு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை நினைத்து கேள்வி கேளுங்கள். நாங்கெல்லாம் எப்போதுமே ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களை யார் நினைத்தாலும் பிரிக்கவே முடியாது.
நான் முதலமைச்சராக ஆனதில் இருந்து இந்த திட்டத்தை போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போடும் திட்டத்தை நாஙகள் உடைத்தெறிந்துகொண்டு தான் இருக்கிறோம். எனவே, இந்த நேரத்தில் நான் சொல்வது அதிமுக யாராலும் உடையாது. உடைக்க முடியாது..முடக்க முடியாது..அப்படி முயற்சி செய்பவர்கள் மூக்கு உடைந்து போவார்கள்” எனவும் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துவிட்டு சென்றார்.