முதல்வர் சொன்னதால அடக்கி வாசிக்கிறோம்.. நாங்களும் எகிறி அடிக்க முடியும் – அமைச்சர் சேகர் பாபு அதிரடி
நாங்கள் தலையிட கூடாது என்று சொல்லுகின்ற உரிமை மதுரை ஆதீனத்துக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கருத்து.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், கோயில்களில் அரசியவாதிகளுக்கு என்ன வேலை என்று மதுரை ஆதினம் தெரிவித்ததை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மிகவும் அடக்கி வாசித்துக் கொண்டியிருக்கிறோம். நாங்களும் எகிறி அடிக்க முடியும். அது நன்றாக இருக்காது என்பதால் சற்று பின்னால் வருகிறோம் என அதிரடியாக தெரிவித்தார்.
அதிக தூரம் ஓடுவது எதற்காக என்றால், குறிப்பிட்ட உயரத்தை தாண்டுவதற்கு என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொன்ன தத்துவத்தை எடுத்துரைத்த பின் பேசிய அவர், எங்களின் பதுங்களை, அவர் பயமாக கருதக்கூடாது. எங்களுக்கும் பாயத் தெரியும். மதுரை ஆதினம் தொடர்ந்து அரசியல்வாதிகளை போல் பேசிக்கொண்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது.
அதேபோல் ஆதீனங்களை பொறுத்தளவில் ஒரு இணக்கமான சூழலுடன் தமிழக முதலமைச்சர், அவர்களது உரிமையில் தலையிட கூடாது என்று எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அந்தவகையில் தான் கடந்த 4-ஆம் தேதி கூட தருமபுரி ஆதீனம் அவர்கள், அவர் கட்டிமுடித்துள்ள 24 அறைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் எங்களை அழைத்து திறந்து வைத்தார்கள். அதோடு, அவர் நடத்துகின்ற பாடசாலை, பள்ளிக்கூடம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, அவருடன் உட்கார்ந்து காலை சிற்றுண்டியை பகிர்ந்துகொண்டு வந்திருக்கிறோம்.
ஆகவே, ஆதீனங்கள் எங்களுக்கு யாரும் ஆதரவாக இல்லை என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்து வருகிறார். ஆதீனங்கள் என்பவர்கள் சைவத்தை சார்ந்தவர்கள். சைவம் என்றாலே தமிழ், தமிழை வளர்க்கக்கூடிய, தமிழை முன்னெடுக்கின்ற ஒரு ஆட்சி, முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி. மதுரை ஆதீனம் அவர் ஒரு அரசியவாதியாக மாறிவிட்டதால் தான் இப்படி ஒரு கருத்தை தெரிவிக்கின்றார்.
அரசியல் என்பது, அனைவரது எண்ணங்களிலும் அவரவர் விரும்புகின்ற கட்சிக்கு சாதகமாக நிலைப்பாட்டில் தான் இருப்பார்கள். அரசியல்வாதிகள் என்பவர்கள் ஒரு ஆட்சியை உருவாக்குகிறார்கள், அரசியவாதிகள் என்பவர்கள் தான் ஒரு ஆட்சி பொறுப்பில் வருகிறார்கள். எனவே, நாங்கள் தலையிட கூடாது என்று சொல்லுகின்ற உரிமை அவர்களுக்கு இல்லை என காட்டமாக தெரிவித்தார்.