“கல்விநிதி விவகாரத்தில் அரசியல் செய்வது நாங்கள் இல்லை” – உதயநிதி ஸ்டாலின்.!
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் என்ன அரசியல் உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளதாக விமர்சித்துள்ளார். மாணவர்களின் அறிவு, திறனை அதிகரிக்கும் நோக்கிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, மத்திய அமைச்சர் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்? மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம்.
கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது, தமிழ்நாடு அரசல்ல. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்விநிதியை கேட்கிறோம். தமிழ்நாடு எப்போதும் மும்மொழி கொள்கைக்கு எதிரானது. மொழிப்போரில் பல உயிர்களை கொடுத்த மண் தமிழ்நாடு. யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும், மக்களின் வரிப்பணத்தையே மத்திய அரசிடம் கேட்கிறோம்”என்று துணை முதல்வர் உதயநிதி மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.