கூட்டணி அமைப்பதில் எங்களுக்கு பேராசை இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

நாங்கள் தெளிவாக இருக்கும்போது பதற்றப்பட வேண்டிய தேவையேயில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

mk stalin and thirumavalavan

சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட த.வெ.க தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பேசிய விஷயம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. விழாவில் பேசிய விஜய் அவர் ” விசிக தலைவர்  திருமாவளவன் இங்கே வரமுடியாமல் போனது.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பிரஷர் இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. அவர் இங்கே இல்லை என்றாலும் அவருடைய மனம் இங்கே தான் இருக்கிறது” என முக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

தன்னை பற்றி விஜய் பேசியதற்கு நேற்றே பதில் அளித்திருந்த திருமாவளவன் “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. விஜய் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை, அப்படி எந்த அழுத்தமும் இல்லை. அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவிற்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை” என கூறியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் ”  கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை” என திட்டவட்டமாக பேசியுள்ளார். இன்று சென்னையில் விசிக தலைமை அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு ” ICONOCLAST” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், கலந்து கொண்டு திருமாவளவன் பேசியதாவது ”  கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை. அங்கே போனால் அள்ளலாமா இங்கே போனால் வாரலாமா இந்த வாய்ப்பை பயன்படுத்தலாமா இதை விட்டால் என்னாவது என்றெல்லாம் எங்களுக்கு எந்த எண்ணமும் கிடையாது.ஏனென்றால், கூட்டணி நிலைப்பாட்டில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

எனவே, அப்படி தெளிவாக இருக்கும்போது பதற்றப்பட வேண்டிய தேவையேயில்லை. எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். மற்றபடி எங்களை சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம். இன்னும் வெளிப்படையாக சொல்ல போனால் அரசியல் ரீதியாக கூட குறைத்து மதிப்பிடலாம். ஆனால் எங்களுடைய  சுயமரியாதையை, தன்மானத்தை, எவனும் குறைத்து மதிப்பிட முடியாது.

கருத்தியல் நிலைப்பாட்டில் கொண்டிருக்கிற உறுதிப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதை மதிப்பீடு செய்யும் அளவுக்கு தகுதி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் இல்லை நாங்கள் கருத்தியல் களத்தில் எவ்வாறு தெளிவோடு, துணிவோடு, உறுதியோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை” எனவும் திருமாவளவன் பேசியுள்ளார். மேலும், விசிக திமுகவுடன் கூட்டணி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்