“எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்;சட்டப்படி எதிர்கொள்வோம்” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு..!
திமுக அரசின் எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்;சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று தொடக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனடியாக முதல்வர் முக ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என பேசியுள்ளார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்புபு தெரிவித்து, சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.குறிப்பாக, முன்னதாகவே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேஜ் அணிந்துகொண்டு சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்து, தற்போது பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்,அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
“நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் பொய் உறுதியாக தமிழக மக்களிடம் சொல்லி அவர்களை நம்ப வைத்து அதன்மூலமாக வெற்றி பெற்று இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது திமுக அரசு,அந்த திமுக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய செயல்களில்,செயல் திட்டங்களை நிறைவேற்றாமல்,மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல்,நாட்டின் பொருளாதாரத்தை எப்படி வளர்த்து எடுப்பது என்று சிந்திக்காமலும்,செயல்படாமலும் உள்ளது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை தங்கள் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு,எதிர்க்கட்சிகளை நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை திமுக அரசு இன்று கையில் எடுத்துள்ளது.இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில் தொடர்ந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் குரல் கொடுத்தார்கள்.அதற்கு உரிய வாய்ப்பு தராமல்,என்ன சொல்கிறார் என்று கேட்காமல்,அடுத்த நடவடிக்கைகளை கொண்டு போகக் கூடிய சூழலில் தான் இன்று பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து எதாவது ஒரு குற்றச்சாட்டை ,வழக்குகளை சட்டத்தின் மூலமாக அவர்கள் கொண்டு வந்து,எங்களை அச்சுறுத்த வேண்டும் என்ற நடவடிக்கையில்,ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது.அதனை கண்டித்து நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம்.
நேற்றும்,இன்றும் அந்த செயல் மிகவும் துரிதமாக ,அதிமுக மீது எப்படியாவது பொய் வழக்கை போட்டு அதிமுகவை செயல்படவிடாமல் நசுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
எங்களை பொறுத்தவரை எந்தவித வழக்குகளுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்,அதை சட்டப்படி எதிர்கொள்வோம்,வெற்றியும் பெறுவோம்.ஏனெனில்,திமுக அரசு தொடுக்கின்ற வழக்குகள் அத்தனையும் பொய்யானவை என்று மக்களுக்கு தெளிவாக தெரியும்.ஆகவே,இன்று மற்றும் நாளை நடைபெறுகின்ற சட்டப் பேரவை கூட்டத்தை அதிமுக இயக்கம் முழுமையாக புறக்கணிக்கும்.இதன்மூலமாக,எங்கள் ஜனநாயக கடைமைகளை நாங்கள் ஆற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதையும்,அராஜக திமுக அரசு எடுத்திருக்கின்ற வன்முறைகளையும்,அராஜக செயல்களையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்றும்,நாளையும் பேரவை புறக்கணிப்பு நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.