பண மூட்டைகளையும், பொய்மூட்டைகளையும் கடந்து நாம் தனி முத்திரையைப் பதிக்கப் போகிறோம் – டிடிவி தினகரன்

Default Image

வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். கருத்துக்கணிப்புகளைத் தாண்டி கழகம் தனி முத்திரை பதிக்கப் போகிறது. போலிகளை அடையாளம் காட்டி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான வழித்தோன்றலாக பிரகாசிக்கப் போகிறோம் என கூறியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாக இருக்கின்றன. தேர்தல் களத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்புக்கான பலன் நமது இயக்கத்திற்கு கிடைக்கவிருக்கிறது. தமிழக மக்களின் மனங்களில் நமக்கென்று தனியிடம் இருப்பது உறுதியாகப் போகிறது. கருத்துக்கணிப்புகளைத் தாண்டி நம்முடைய கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறவிருக்கிறது.

வாரியிறைக்கப்பட்ட பண மூட்டைகளையும், வாக்குறுதிகள் என்ற பெயரில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பொய்மூட்டைகளையும் கடந்து நாம் அழுத்தமான முத்திரையைப் பதிக்கப் போகிறோம் என குறிப்பிட்டுள்ளார். நம் இலட்சியத்தை அடைந்து, அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை உயர்த்தி பிடித்து, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற தனிப்பெரும் சக்தியாக நாம் எழுந்து நிற்கப் போகிறோம்.

அத்தகைய மகத்தான வெற்றியை உறுதி செய்ய, நாளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கிற கழக கண்மணிகள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். எந்தவிதமான கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காமல், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரையிலும் கழக முகவர்கள் அந்தந்த மையங்களில் இருந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறபடி கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் சரியாக கடைபிடித்திட வேண்டும். வாக்கு எண்ணிக்கை பணிக்கான முக்கியத்துவத்தைப் போன்றே உங்கள் ஒவ்வொருவரின் உடல் நலனும் முக்கியமானது என்று கூறி, அம்மாவின் உண்மையான பிள்ளைகளாக நின்று அத்தகைய சாதனையை நிகழ்த்திக்காட்டி புதிய சரித்திரம் படைத்திடுவோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்