8 ஈஷா வித்யா பள்ளிகளை கரோனா சிகிச்சைக்காக அரசுக்கு அளிக்கிறோம் – சத்குரு..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசுக்கு அளிக்கிறோம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய #கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
We are offering premises of #IshaVidhya schools to Tamil Nadu government as #COVID care centers with a bed capacity of 990. I appeal to the community to unite in strengthening the hands of the administration to overcome this challenge. –Sg @ishavidhya #BeatTheVirus
— Sadhguru (@SadhguruJV) April 27, 2021
இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதேபோல், கடந்தாண்டு கரோனா நிவாரணப் பணிகளுக்காக சத்குரு தனது பங்களிப்பாக மட்டும் ரூ.11.54 கோடியை வழங்கினார். இந்நிதி அவரது ஓவியங்களை ஆன்லைனில் விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்டது. மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, கசாயம் வழங்கி அவர்களின் பசியை போக்கினர்.
மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் PPE kit போன்ற உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கும் பணிகள் இப்போதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.