ஆமாம், மதுரை எய்ம்ஸ் ‘லேட்’ தான்.! ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்.!
மதுரை எய்ம்ஸ் : கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை, திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 2019, 2024 தேர்தல் என இரு தேர்தல்கள் கடந்தும் இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் முழுவீச்சில் ஆரம்பிக்கப்படவில்லை.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் இன்று பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு நின்றுவிட்டது. 2 தேர்தலை கடந்தும் இன்னும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது, கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடைபெறவில்லை.
4 ஆண்டுகளுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது ஆனால், அதற்கான நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்கப்படாமல், கட்டுமான பணிகள் நடைபெறாமல் அப்படியே உள்ளது என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி.நட்டா பதில் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதம் ஆவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மதுரை எய்ம்ஸ் தாமதம் தொழில்நுட்ப கரணங்களால் ஏற்பட்டுள்ளது. வெகு விரைவில் அந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பதில் அளித்துள்ளார்.