வயநாடு நிலச்சரிவு : 1 கோடி ரூபாய் நிவாரணம்.! தமிழக காங்கிரஸ் அறிவிப்பு.!
வயநாடு நிலச்சரிவு : கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில மீட்பு படையினர், ராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, அவர்களுக்கு உதவிகள் புரிய தமிழக அரசு சார்பில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணி அளவில் வயநாடு சென்றடைந்தனர். மேலும், தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு வங்கி கணக்கு எண் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் வெளியிடபட்டிருந்தது. அதன் மூலம் மக்கள் தங்களால் முடிந்த நிதியை கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூபாய் 1 கோடி கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மூலமாக காசோலை வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவும், அதிகாலையிலும் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதி கடும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவின் பாதிப்பால் 167 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இப்பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் இழப்பீட்டுத்தொகை அறிவித்திருக்கிறது.
இந்த பயங்கர நிலச்சரிவில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் இழப்பீட்டுத்தொகை வழங்கியதோடு கேரள மாநில அரசுக்கு ரூ. 5 கோடி நிவாரணத்தொகை வழங்கியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக முழு மனதோடு வரவேற்கிறேன்.
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூபாய் 1 கோடி கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மூலமாக காசோலை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள மாநில அரசு மற்றும் பேரிடர் மீட்புக்குழு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு வயநாடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், உதகமண்டல சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமாகிய திரு ஆர். கணேஷ் அவர்களின் ஏற்பாட்டில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கண்ட 80 காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்ட மீட்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட மீட்புக்குழுவினரோடு தொடர்பு கொண்டால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும், கூடலூர் சட்டமன்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் தயாராக உள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் அறிக்கையில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.