பிளாஸ்டிக் பைகளில் பறவைகள் கூடுகட்டும் அவலநிலை..!
பிளாஸ்டிக் பைகளை கொண்டு நீர்பறவைகள் கூடு கட்டுவதால் பறவையினங்கள் அழியும் அபாயநிலை ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் தற்போது இருக்கும் காலநிலையால் பல்வேறு பகுதியிலிருந்து பறவைகள் வருவது வழக்கம். பறவைகள் வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். இந்த நேரத்தில் இந்தியன் ரோலர், கார்மரண்ட், யுரேஷியன் கூட், மலபார் விஸ்லிங் திரஸ், கிங்பிஷர் ஆகிய பறவைகள் இந்த இடத்திற்கு வரும். இந்த பறவைகள் பொதுவாக தாமரை தண்டுகள், இலைகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் இவற்றை வைத்து இந்த இடத்தில் கூடு கட்டும்.
ஆனால், தற்போதுள்ள சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக பறவைகளின் வாழ்வியல் முறைகளும் மாறியுள்ளது. இங்கு வந்த பறவைகள் நீர்நிலைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், நார்கள் மற்றும் பாலிதீன் கவர்கள் என இவற்றை கொண்டு வந்து வீடு கட்ட தொடங்கியுள்ளது. மேலும், தனது குஞ்சுகளுக்கும் கூடு கட்ட பழக்கப்படுத்துகிறது. இதே முறை நீடித்தால், பறவை இனங்கள் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக பறவை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.