“நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்கிறார்” – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையிலும்,அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், ‘கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்லை.எனவே,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பற்றி பேச இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதி இல்லை என்று தெரிவித்தார். மேலும் 30 ஆண்டு சராசரி கணக்கீட்டுபடி, நவம்பர் 30-ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரைத் தேக்கலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில்,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் செல்லூர் ராஜூ அவர்கள் கூறியதாவது:
“நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேரள அரசை கண்டிக்க முடியாமல் காமெடி செய்து வருகிறார்.தன்னிலை மறந்து காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் விமர்சித்துள்ளார்.
திமுக அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டும் ஆபத்தை உருவாக்கவில்லை.இதுபோன்ற ஒரு சூழ்நிலை காவிரி ஆறு பிரச்சனையிலும் வரும்,கபினி அணையிலும் வரும்”,என்று தெரிவித்துள்ளார்.