#Breaking: “கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை”- சுகாதாரத்துறை செயலாளர்!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதி கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டபின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என எச்சரித்த அவர், சென்னையில் மொத்தமாக 18,852 படுக்கைகள் உள்ளதாக கூறினார்.
இந்திய பாதிப்பில் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 3% ஆக உள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.