எச்சரிக்கை: உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்புவகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், உத்தரவை மீறி சிறப்புவகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதுபோல் நாமக்கலில் ராசிபுரத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்புவகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட முதன்மை செயலாளர் அதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தார்.
இதையடுத்து கடலூரிலும் சிறப்புவகுப்பு நடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் சிறப்புவகுப்புகள் நடப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில், பள்ளிகளில் தேர்வுகள் தவிர வேறு எந்த வகுப்புகளும் நடக்கக்கூடாது என்றும் மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லைக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.