முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் – நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை பேட்டி
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜர்.
திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டதை எதிர்த்து முதலமைச்சர் உள்பட திமுகவினர் வழக்கு தொடுத்தனர். அந்தவகையில், அவதூறான கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்ததாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டிஆர் பாலு வழக்கு தொடுத்திருந்தார்.
திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாகவும், அவரது கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அண்ணாமலை ஜூலை 14ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம். பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.