வக்ஃப் சட்டத்திருத்த மசோதா – தவெக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.?
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்த நிலையில், இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்டந்தோறும் நாளை (ஏப்ரல் 4, 2025) ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு தவெக தலைமை உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் போராட்டம் அறிவிப்பதற்கு முன், தவெக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தவெக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக-வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், தவெக வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் மூலம், மதம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான விவகாரங்களிலும் தவெக தலையிட முனைகிறது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இன்றைய தமிழ்நாடு சட்டபேரவையில் வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பின்னர், வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவை வளாகத்தில் திரண்ட திமுக எம்எல்ஏக்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி மசோதாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.