இரவு 10 மணி வரை காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றிய வாக்காளர்கள்.. இடைத்தேர்தலில் 75% வாக்குப்பதிவு.!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.74 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
தமிழகமே எதிர்பார்த்து, பொது தேர்தலுக்கு இணையாக பேசப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று வெற்றிகரமாக முடிந்தது என்றே கூறலாம். பலத்த பாதுகாப்பு வசதியுடன் எந்த வித அசம்பாவிதமும் நேராமல் பாதுகாப்பாக தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட ஒரு சில வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலை 7 மணி முதல் வாக்களித்தனர். ஆறு மணிக்கு தேர்தல் நிறைவடையும் என்பதால் ஆறு மணி வரை வாக்குச்சாவடியில் இருக்கும் நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஐந்து வாக்கு பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் வைக்கப்பட்டன. வாக்காளர்கள் வேட்பாளர்கள் அதிகம் என்பதால் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க காலதாமதமானது அதனால் மக்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து தான் ஓட்டு போடும் நிலை பல்வேறு இடங்களில் இருந்தது.
குறிப்பாக ராஜாஜி நகரில் 6 மணிக்கு பிறகு சுமார் 368 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவராக 6 மணிக்கு மேல் வாக்களிப்பதற்கு மணி 9:30ஐ தாண்டி விட்டது. இருந்தும் அவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இறுதியாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 1,70,192 வாக்காளர்கள் வாக்களித்தனர். 74.79 சதவீதம் வாக்குபதிவு பதிவாகி உள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இதன் முடிவுகள் மார்ச் இரண்டாம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.