பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திருட்டு! சீல் பிரிப்பதற்கு முன்னர் வாக்குப்பெட்டியை மீட்ட காவல்துறையினர்!
- புதுக்கோட்டை மாவட்டம் பெரியமுள்ளிப்பட்டியில் வாக்குப்பெட்டி வாக்குச் சாவடியில் நேற்று இருந்து திருடப்பட்டது.
- அந்த வாக்கு பெட்டியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். அது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் கிராம ஊராட்சித்தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஒரு வழியாக தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பெரியமுள்ளிபட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குசாவடியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வாக்கு பெட்டியை சிலர் தூக்கி சென்றனர். தடுக்க முயன்ற காவலர்களை தள்ளிவிட்டு தூக்கி சென்றனர்.
இந்த சம்பவம் மிகவும் அப்பகுதியை பரபரப்பாக்கியது. பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் திருடி கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டியை சீல் உடைப்பதற்கு முன்னர் பத்திரமாக மீட்டனர். திருடி சென்ற இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.