தொகுதி பங்கீடு: அவர்களுக்கு கொடுத்தது எங்களுக்கும் வேணும்., பிடிவாதம் பிடிக்கும் தேமுதிக.,தொடர்ந்து பேசும் அதிமுக.!
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து நீடித்து வரும் பேச்சுவார்த்தை, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் தேதி அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக, திமுக என இரு பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தீவிரமாக தொடங்கியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்ததை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் அதிமுக, தேமுதிக தொகுதிப் பங்கீடு குறித்து மீண்டும் 2வது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேசுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாமாவிற்கு 23 தொகுதிகள் வழங்கிய நிலையில், தேமுதிகவுக்கு 23 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 தொகுதிகள் மட்டும் ஒதுக்கினால் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தேமுதிக பிடிவாதம் காட்டி வருவதாகவும், அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 14 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை 2011ல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை வெற்றி பெற்றது.
2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 3வது அணியாக உருவெடுத்த மக்கள் நல கூட்டணிக்கு தேமுதிக தலைமை தாங்கியது. இதில் 104 தொகுதிகளில் வேட்பாளரை களமிறக்கிய தேமுதிக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த தேமுதிக தொடர்ந்து அந்த கூட்டணிலேயே நீடித்து வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாமகவிற்கு ஒரு மாநிலங்களைவை எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு அப்போது எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் தேமுதிக சுட்டிகாட்டிக்கிறதாம். இதனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கான முடிவு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.