விருதுநகர் : பட்டாசு ஆலை வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
தனியார் பட்டாசு ஆலையில் வேதிப்பொருட்கள் கலவையின்போது விபத்து நேர்ந்தது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பைய நாயக்கன்பட்டியில் சாய்நாத் என்கிற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இன்று காலை வழக்கம் போல ஆலை இயங்கி வந்த நிலையில், மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பட்டாசுகள் வெடி சிதறியதில் ஆலையில் இருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாக வெடித்து சிதறியது. உடனடியாக சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவலை கொடுத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அடுத்ததாக 3 பேர் என மொத்தமாக 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வேறு யாரும் சிக்கி உயிரிழந்துள்ளார்களா? எனவும் தொடர்ச்சியாக தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து சம்பவத்தை தொடர்ந்து வேலைக்கு வருகை தந்தரவர்கள் யார் என்பதற்கான வருகை பதிவேடுவை சேகரிக்கும் பணியையும், விபத்து ஏற்பட்ட காரணம் பற்றியும் விசாரணையை காவல்துறை தொடங்கியுள்ளது.
விபத்து நடந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியதாவது ” விபத்து நடந்த பட்டாசு ஆலையில் 6 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலை உரிமம் பெற்று தான் இயங்கி வந்தது. முதற்கட்ட தகவலின் படி, வேதிப்பொருளில் கெமிக்கல் கலக்கும்போது தான் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இன்னும் முழுமையான விசாரணை இது குறித்து நடந்து முடியவில்லை. விசாரணை முடிந்த பிறகு முழு விவரம் தெரிவிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.