வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக ஞானசேகரன் என்பவரை அதிரடியாக கைது செய்தது. அவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்த சம்பவம் குறித்து சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர் சந்திப்பு நடத்தி பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” அண்ணா பல்கலைக்கழகத்தில் மனைவிக்கு நடந்த சம்பவம் குறித்து புகார் வந்தவுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரிடம் இப்போது தீவிரமான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வந்தது என்றால் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் நாங்கள் எடுப்போம். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க முன் வந்த மாணவிக்கு நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். புகார் கொடுக்க வருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் காரணமாக தான் இப்போதெல்லாம் புகார் அளிக்க பலரும் முன்வருகிறார்கள்.
பிள்ளைகளுக்கு எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக 181 என்ற என்னை தொடர்பு கொண்டு பிரச்சினைகள் பற்றி புகார் கூறுகிறார்கள். பெண்களுடைய தோழிகளும் அந்த எண்களை தொடர்பு கொண்டு குழந்தை திருமணம் நடைபெறும் புகார்கள் கூறுகிறார்கள். அனைத்து உதவி எண்களும் நல்ல முறையில் செயல்பட்டுகொண்டு இருக்கிறது. புகார்கள் அதிகமாக வருவதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி அதிகமானால் யார் இந்த மாதிரி சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான புகாரை கொடுக்க முன் வந்து கூறுங்கள்.
அரசு கண்டிப்பாக அதற்கான விசாரணையை நடத்தி அவர்களுக்கான தண்டனையை வாங்கிக்கொடுக்கும். பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் நோக்கில் வேகமாக விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ” பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதைப்போல, அரசு பெண்களுக்கு நன்மைபயக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்களும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” எனவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.