புதிய திரைப்படங்கள் கொண்டாட்டத்தின் போது வன்முறை! உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு கொடுத்த சமூக ஆர்வலர்!
தமிழகத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது முதல் நாள் சிறப்பு காட்சிக்கு பல ரசிகர்கள் வருகிறார்கள். படம் வெளியாகும் முதல் நாள் என்ற காரணத்தினாலே அனைவரும் இணைந்து கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் கொண்டாட்டமாக இருந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால், சில சமயம் இது வன்முறையாகவும், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாறிவிடுகிறது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் போது முதல் நாள் முதல் காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் லாரி மீது ஏறிக்கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்த போது எதிர்பார்த்த விதமாக கீழே விழுந்து உயிரிழந்தார் . அதைப்போல, விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் போது சென்னை ரோகினி திரையரங்கில் ட்ரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கு இருக்கையை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இதைப்போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால் தமிழகத்தில் இளம் சமுதாயம் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும், ரசிகர் காட்சியின்போது வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர் ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், புதிய திரைப்படங்கள் மற்றும் முன்னணி நட்சத்திர நாயகர்களின் புதிய பட ட்ரெய்லர் வெளியிடப்படும் போது ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும். ஒரு புதிய திரைப்படம் வெளியாகும்போது பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், தமிழகம் முழுவதும் இருக்க கூடிய திரையரங்குகளில் புதிய திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டின் போது ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த திரைப்பட ரசிகர்கள் காட்சிக்கு சரியான விதிகளை வகுத்து வரைமுறைப்படுத்தி படங்களை வெளியிட உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஐயா கொடுத்த இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விர்சனைக்கு வரவுள்ளது.