விதிகளை மீறி தேர்தல் பணிமனை – வழக்குப்பதிவு செய்த காவல்துறை
விதிகளை மீறியதாக கூறி 6 தேர்தல் பணிமனைகள் இயங்கியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் விதிகளை மீறியதாக கூறி 6 தேர்தல் பணிமனைகள் இயங்கியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுகவின் ஒரு பணிமனையும், திமுகவின் 5 பணிமனைகளும் தேர்தல் விதிகளை மீறி இயங்கியதாக புகார் எழுந்த நிலையில், ஈரோடு நகர காவல் நிலையத்தில் 5 வழக்குகளும் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிமனைகளை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதன்படி, 100க்கும் மேற்பட்ட பணிமனைகள் இயங்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதில், பல தேர்தல் பணிமனைகள் அனுமதியின்றி இயங்கி வருவதாக தொடர் புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் விதிகளை மீறி அனுமதியின்றி இயங்கி வரும் தேர்தல் பணிமனைகளை தேர்தல் நடத்தும் அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தினம் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து, மொத்தம் 14 தேர்தல் அலுவலகங்கள் அனுமதியின்றி செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. ஈரோட்டில் விதிகளை மீறி 20 பணிமனைகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.