மதகு உடைந்து வெளியேறிய தண்ணீர்! மணல் மூட்டைகளை வைத்து பெரிய பாதிப்பை தடுத்த இளைஞர்கள்!
- விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய ஏரி.
- இந்த ஏரியின் முழு கொள்ளளவையும் எட்டி, அதன் மதகு ஒன்று உடைந்து விட்டது. அதனை மணல் மூட்டைகளை வைத்து இளைஞர்கள் தண்ணீர் கசிவை தடுத்து நிறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள சத்தியமங்கலம் எனும் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த ஏரிதான் வாழப்பாடி, சத்தியமங்கலம், மணாலிபாடி ஆகிய சுற்றுவட்டார ஊர்களுக்கு தண்ணீர் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரியில் நேற்று முன்தினம் இரவு அதில் உள்ள ஒரு மதகில் உடைப்பு ஏற்பட்டு, நீர் கசிந்துள்ளது. இதனை நேற்று பார்த்த ஊர்மக்கள் தண்ணீர் அதிகமாக வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு, மதகு உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி கசிவை சரி செய்தனர்.
இதனால், நீர் வெளியேற்றம் பெரும்பான்மையாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, கிராம நிர்வாக அதிகாரியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வந்து நேரில் பார்வையிட்டு,பின்னர் ஜேசிபி எந்திரம் மூலம் ஏரியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீர் வெளியேறுவதை கண்டு இளைஞர்கள் துரிதமாக செய்யப்பட்டதால் மதகு பெருமளவு சேதம் அடையாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.