சேலம் : கந்துவட்டி கொடுமை.! ஊரே ஒன்றுகூடி கலெக்டர் அலுவலகம் சென்றதால் பரபரப்பு.!
கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், ஆங்காங்கே அதன் கொடுமைகளை மக்கள் அனுபவித்து தான் வருகின்றனர்.
அப்படியான சம்பவங்கள் பூதாகரமாக வெளிவரும்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது. அப்படித்தான் சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் எனும் ஊரில் இருந்த கந்துவட்டி கொடுமை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் அவரது குடும்பத்தாரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து அதே ஊரை சேர்ந்த ரவீந்தரின் என்பவர் தட்டிக்கேட்டதால், திருநாவுக்கரசு குடும்பத்தார் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ரவீந்திரன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இந்த சம்பவத்தை அடுத்து தான் டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த பொதுமக்கள் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வரும் திருநாவுக்கரசு மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் சென்று விட்டனர்.
அங்கு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி அனுப்பிவைத்தனர்.