கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல – ஜி.கே.வாசன்!
கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பது மக்கள் நலனுக்காக தான் எனவும், ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பிவிட இதை ஒரு களமாக பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தான் பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இதனால் சில இடங்களில் முன்னேற்றமும் சில இடங்களில் எதிர்பார்ப்புக்கு அதிகமாக கொரானா தொற்றும் ஏற்பட்டு இருக்கிறது.
சில மாதங்களுக்கு இந்த கொரோனா தொற்று தொடர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருப்பதால், தமிழக அரசால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுடைய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயர்வதற்கான வழிகளாக தான் பேருந்துகள், ரயில்கள், கடைகள் ஆகியவை திறக்கவும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. இருப்பினும் மக்கள் அலட்சியமாக இருப்பதால் தொற்று மேலும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பதால்தான் கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக அரசுக்கு எதிராக மக்களைத் திருப்பி விடுவதற்காக இந்த கிராமசபை கூட்டங்களை ஊரடங்கு நேரத்தில் நடத்தி அதை அரசுக்கு எதிராக மக்களைத் திருப்பி விடுவதற்கான ஒரு களமாக பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது கிராம வளர்ச்சிக்கு உதவாது. இதனால் கிராமங்களில் கொரோனா பரவுவதற்கான சூழ்நிலையை மேலும் அதிகப்படுத்திவிடும். கிராமசபை கூட்டம் நடத்துவது முக்கியம் என்றாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதை தடை செய்திருக்கும் பொழுது எதிர்க் கட்சிகளும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்கைக் கடைப்பிடித்து நடப்பதுதான் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். இதைதான் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.