கிராம நிர்வாக அலுவலர் கொலை – 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை நேற்று அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வெட்டி கொலை:
இதில், படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ராம சுப்ரமணியன் என்பவர் கைது செய்த நிலையில், 4 தனிப்படை அமைத்து மற்றொரு குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர்.
குற்றவாளிகள் கைது:
இந்த சமயத்தில், இன்னொரு குற்றவாளியான மாரிமுத்துவை இன்று நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்திருந்தார்.
ஆட்சியர் உறுதி:
மேலும், விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர், ஆக்கிரமிப்புகளை அகற்றியவர் என கூறிய ஆட்சியர், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் எனவும் உறுதி அளித்தார். இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு:
கிராம நிர்வாக அலுவலர் மகன் கொடுத்த புகாரில் குற்றவாளிகள் மீது முறப்பநாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி, அத்துமீறி நுழைதல், கொலை செய்தல், ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.