“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!
நடிகர் விஜயின் வக்பு தொடர்பான நிலைப்பாடு பச்சையான இந்து விரோத நிலைப்பாடு. இதனை சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள வக்பு சட்டதிருத்தத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வக்பு வாரிய சொத்துக்களை அடையாளம் காணும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கும் திருத்தம், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத பிரதிநிதிகள் இடம்பெறுவது உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார். அதேபோல தவெக தலைவர் விஜய் வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக வெளியிட்ட அறிக்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ” தவெக தலைவர் விஜய் அலுவலகம் இருக்கும் பனையூர் பகுதியை வக்பு வாரியத்திற்கு சொந்தம் என கூறி இருந்தால், நடிகர் விஜய்க்கு புத்தி உறைந்திருக்கும்.” என கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், “விஜய் வேப்பூர், பவானி, கோபிசெட்டிபாளையம் சென்று பார்க்க வேண்டும். அவருக்கு வக்பு பற்றி என்ன சார் தெரியும்? ஒர்க் ஃபர்ம் ஹோம் மாதிரி, ஒர்க் ஃபர்ம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அப்படி வீட்டில் இருந்துகொண்டே ஏதேனும் பேசிக்கொண்டு அறிக்கை கொடுத்துட்டு இருக்கிறார். இது விஜயின் 100 சதவீத இந்து விரோத செயல்பாடு. இதனை சொல்வதற்கு எனக்கென்ன கட்டுப்பாடு? இதை சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நடிகர் விஜயினுடைய வக்புக்கு சொந்தமான செயல்பாடுகள் அனைத்தும் இந்து விரோதம். இந்துக்களுக்கு துரோகம். இதனை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ” என தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்தார் எச்.ராஜா.