விஜயின் அரசியல் பயணம்… பெரியார், காமராஜர், அம்பேத்கரை குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.! சத்யராஜ் பேச்சு.!
விஜய் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது என்று கோவையில் நடிகர் சத்யராஜ் பேட்டி.
கோவையில் தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்த பின், விஜய்யின் கல்வி விருது நிகழ்வு குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் நடிகர் சத்யராஜிடம் முன்வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய சத்யராஜ், பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்விக்கு உதவி செய்தது மிகவும் நல்ல விஷயம். அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாக சொல்லாதபோது நான் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது.
இதனால் அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களை முன்னுதாரணமாக வைத்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும், இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் இதை கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது எனவும் கூறினார்.
மேலும், ‘லியோ’ பட போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்கள், தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சில விஷயங்களை செய்து தான் ஆகவேண்டும். நான் இப்போது வில்லனாக நடித்திருக்கும் ஒரு படத்தில் கூட புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. இதனால் நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்றார்.
நடிகர் விஜய், நேற்று முன்தினம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், கல்விதான் பறிக்க முடியாத சொத்து, அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது உள்ளிட்ட கல்வி மற்றும் அரசியல் குறித்து பேசியிருந்தார்.
கல்வி விருது விழா, விஜயின் அரசியல் பேச்சு உள்ளிட்டவை குறித்து பார்க்கும்போது, நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. அதுபோல் தான் அவரின் செயல்பாடுகள் உள்ளது என்கின்றனர். கல்வி விருது விழாவில் அவரின் பேச்சு குறித்தும், கல்வி விருது குறித்தும் பலரும் ஒரு பக்கம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம், விஜயின் இந்த செயல், அரசியல் களத்திற்கு போட்ட விதை என்றும் கூறி வருகின்றனர்.