“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

tvk vijay

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களது சிலைகளை திறந்து வைக்கும் விஜய், தனது சுற்றுப்பயண விவரங்களையும் வெளியிட உள்ளார்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம். தற்பொழுது, தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,” மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது.அதில்தான். கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.

இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம். குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது, மக்களரசியல் மட்டுமே.

தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான், நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.

கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பணி வாயிலாக, நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு வீடு விடாமல், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, நமது வலிமையை நாட்டுக்குப் பறைசாற்றி, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம். அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும்.

மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான், தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி.

1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர். 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது. இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான். அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே, இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்