விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாககொண்டு செல்லப்படுகிறது. தீவுத் திடலில் இருந்து ஈவேரா பெரியார் சாலை வழியாக கோயம்பேடு நோக்கி விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்கிறது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் மாலை 4 .45 மணிக்கு அளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பின்படி முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படுகிறது. விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் சந்தன பேழையில் “புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதேபோல விஜயகாந்த் பிறப்பு , இறப்பு தேதிகளும் இடம் பெற்றுள்ளன.